சென்னை: திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பெ.சு.திருவேங்கடம்  காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுகவின் மூத்த தலைவரும்,  தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான  பெ.சு.திருவேங்கடம் உடல்நலக்சுகுறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடல்,  சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரியகிளாம்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

பெ.சு.திருவேங்கம் உடலுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து, முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘ஒன்றிணைந்த வடார்க்காடு மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியும் கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான திரு. பெ.சு. திருவேங்கடம் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தாம் கழகத்துக்காக ஆற்றிய பணிகளுக்காக 2017-ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் “அண்ணா விருது” பெற்ற பெருமைக்குரியவர் பெ.சு. திருவேங்கடம் அவர்கள். அவரை இழந்து வாடும் அவரது மகன் கலசப்பாக்கம் சட்டமன்ற – உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.