சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!”  என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக) தலைவர் பழ.கருப்பையா  விமர்சனம் செய்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை தமிழக அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையற்ற அரசியல் செய்து, மக்களிடையே மதவெறுப்பை  ஏற்படுத்தவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பல கட்சிகள் அரசியல் செயலாற்றி வருகின்றன.

இதற்கிடையில், புதிதாக கட்சி தொடங்கி, தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் 41 உயிர்களை காவுவாங்கிய தவெக தலைவர் விஜய், தலைகணத்தில் பேசி வருகிறார். ஆட்சியில் பங்கு, ஊழலில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என ஆசை வார்த்தை கூறி மாற்று கட்சியினரை இழுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு ஆசைப்பட்டு, செங்கோட்டையன் போன்ற சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அங்கு போய் அடைக்கலமாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்து தமிழ் செய்திதாளுக்கு ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற  பெயரில் ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும், மூத்த தலைவர்  பழ.கருப்பையா தவெகவையும், செங்கோட்டையன் போன்றவர்களையும் கடுமையாக சாடி உள்ளார்.

 “பொறுக்கித் தின்ன நினைக்கும் யாரும் எங்கள் கட்சிக்கு வரவேண்டாம்” என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு,  ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற தமது கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் பழ கருப்பையா.

பழ. கருப்பையா அரசியல்… 

பழம் பெரும் அரசியல்வாதியாக பழகருப்பையா ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் இந்திராவுக்கு எதிராக காமராஜர் தனிக்கட்சி தொடங்கியது அதில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்ததது.

அதன்பிறகு பழ.கருப்பையா,  ஜனதா கட்சியில்  இணைந்தார். ஆனால், அங்கு தலைமை பதவிக்கான மோதல் ஏற்பட்டு,   அக்கட்சி இரண்டாக பிளந்தபோது, விபிசிங் தலைமையிலான ஜனதா கட்சியில் இணைந்தார்.  ஆனால், அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதனால் அங்கிருந்து விலகினர்.

இதையடத்து,  1989ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.  சில ஆண்டுகள் அங்கிருந்தார்.

ஆனால், அங்குள்ள தலைவர்கள் இவரை  கண்டுகொள்ளாத நிலையில்,   அதிருப்தியில் இருந்தவர்,

வைகோ  திமுகவின் குடும்ப அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பி அங்கிருந்து விலகினார். 1993ஆம் ஆண்டில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து  மதிமுக தொடங்கியபொழுது  பழ கருப்பையாவும் திமுகவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தார்.

ஆனால், வைகோ அரசியலும் அவருக்கு ஒத்துவரவில்லை.

1996 ஆம் ஆண்டில் மதிமுகவிலிருந்து விலகி தனியாளாக காரைக்குடி தொகுதியில் சுயட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை.

இதையடுத்து, மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் சிறிதுகாலத்தில் அங்கிருந்து விலகினார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் நடிகர் சோவின் ஆலோசனையின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில்  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சேர்ந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக சார்பில்,  போட்டியிட்டு திமுகவின் செல்வாக்கு மிக்க அப்பகுதியில் முதல் முறையாக அதிமுக சார்பில் வெற்றிபெற்று 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.

பின்னர் சிறிது நாட்களில் கட்சி கொள்கைகக்கு எதிராக செயல்பட்டதாக கூறிய அவரை ஜெ. நீக்கினார். அடுத்தநாள் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து, 2016ம் ஆண்டு மு.கருணாநிதி முன்னிலையில் மீண்டும்,   திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஆனால் அங்கு நடைபெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாக, “கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்” என்று அறிக்கைவிடுத்து திமுகவிலிருந்து பழ. கருப்பையா விலகினார்.

இதைத்தொடர்ந்து 2021ல் கமல்ஹாசனின் மநீம கட்சியில் இணைந்தார். ஆனால், மநீம கட்சி தொண்டரே இல்லாத ஒரு கட்சி என்பது தெரிய வந்ததால், அதில் இருந்து விலகியவர் தனக்கென ஒரு தனிக்கட்சியை தொடங்கி செயலாற்றி வருகிறார்.

தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக)  என்ற பெயரில் தனது அதரவாளர்கள் என சிலரை வைத்துக்கண்டு கட்சி நடத்தி வருகிறார். ,இந்த கட்சி 2023ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கினார். ஆனால், இப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்பது தமிழ்க வாக்காளர்களின் 90 சதவிகிதம் பேருக்கு தெரியாது என்பதே தற்போதைய நிலைமை.

இந்த நிலையில், இந்து தமிழ்திசைக்கு அவர் கொடுத்த பேட்டி இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

2026  தேர்தலில் ததக என்ன முடிவெடுக்கப் போகிறது?

தமிழ்நாட்டை சூறையாடி வருகின்ற ஊழல் மலிந்த, ஆட்சித் திறன் அற்ற திராவிட மாடல் அரசை அகற்றுவதே எங்களின் தலையாய நோக்கம். அதற்காக எதிர்த்தரப்புடன் இணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம்.

விஜய்யின் அரசியல் வருகையைப் எப்படிப் பார்க்கிறீர்கள்?

விஜய் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் அவர், தானே முதலமைச்சர் என்கிறார். அதற்காக ஆட்சியில் பங்கு என்ற தூண்டிலை எடுத்துப் போட்டார். காங்கிரஸ் அந்தத் தூண்டிலில் விழும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இவரைச் சொல்லி திமுக-வை மிரட்டத்தான் காங்கிரஸ் நினைத்ததே தவிர, இவர் பக்கம் வரவிரும்பவில்லை. இவரே கரை சேருவாரா என்று தெரியாதபோது மற்ற கட்சிகள் தங்களுக்கு இருக்கின்ற இருப்பையும் இழக்க விரும்பவில்லை. தேர்தல் களத்தில் பாடம் கற்றுக் கொண்டு விஜயகாந்த் தன்னை மாற்றிக் கொண்டார். களத்தில் படிக்காத விஜய்க்கு அது புரியவில்லை.

விஜய்யைக் கண்டு எல்லாக் கட்சிகளுமே அலறுகின்றனவே..?

எம்ஜிஆர் ஒருவர் தான் அரசியலைப் புரிந்து அரசியலோடு வளர்ந்த நடிகர். அவருக்கு யோசனை சொல்ல கல்யாணசுந்தரம் போன்ற அரிய மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் விஜய்க்கு, பாமக-வை கவிழ்த்துவிட்டு வந்த ஜான் ஆரோக்கியம் போன்றவர்கள் தானே ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பெருங்கூட்டைத்தக் கூட்டினால் நாடே அதிர்ந்துவிடும் என்று ஆலோசனை சொன்னார்கள். அப்படி கூட்டத்தைத் திரட்டி 41 பேரைச் சாகடித்தார்கள். இருந்தாலும் திமுக-வை தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதால் விஜய்யை தனது கூட்டணிக்குள் சேர்க்க துடிக்கிறது அதிமுக. தங்களுக்கு விழும் சிறுபான்மையினர் ஓட்டுகளை சிதிலப்படுத்திவிடுவார் என்பதால் திமுக விஜய்யைப் பார்த்துப் பதறுகிறது.

இந்தத் தேர்தலுடன் செங்கோட்டையனின் அரசியல் சகாப்தம் முடிந்துவிடும் என்று சொல்லி இருக்கிறீர்களே..?

ஆமாம். பிரபலமான ஒரு மனிதர் கட்சி மாறினால் அவரது சாதி ஒட்டுமொத்தமும் அவர் பின்னால் வந்துவிடும் என்பது யூடியூபில் இருக்கிறவர்கள் பேசுகிற பேச்சு. ஆனால், அது உண்மை இல்லை. ஒருமுறை கருணாநிதிக்கும் ஒருமுறை ஜெயலலிதாவுக்கும் எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. அதுபோல இப்போது திமுக எதிர்ப்பு என்பது உச்சத்தில் இருக்கிறது. திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். அதனால் செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்.

ஸ்டாலினுக்கு புத்தி இல்லை என்கிறீர்களே… .?

பிறகென்ன… நாலரை ஆண்டுகளில் நாலரை லட்சம் கோடி கடனை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றுமில்லாததை எல்லாம் பெரும் பிரச்சினையாகப் பேசுகிறது திமுக. ஆனால், பேசவேண்டியதை பேச மறுக்கிறார்கள். எஸ்ஐஆரில் முஸ்லிம் வாக்குகளை எல்லாம் நீக்கிவிடுவார்கள் என்று பீதியைக் கிளப்புகிறார் ஸ்டாலின். பிஹாரில் இருந்து ஒரு கோடி பேர் தமிழ்நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

இவர்களெல்லாம் வாக்களித்தால் தமிழ்நாட்டின் நாகரிகம், பண்பாடு என்னாகும்? நாளை, மொழியின் வளம் தெரியாத கூட்டத்திடம் தமிழகத்தின் ஆட்சி சிக்காது என்தற்கு என்ன உத்தரவாதம்? ஆனால், இதையெல்லாம் பேச மறுக்கிறார் ஸ்டாலின். ஏனென்றால், பிஹாரிகளுக்கு பாதுகாப்புத் தருகிறோம் என்று சொல்லி நிதிஷ் குமாரின் காலில் விழுந்து அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்ததே ஸ்டாலின் தான்.

விஜய்யும் சீமானும் தமிழக அரசியலையே குழப்பிவிட்டதாக குறைபட்டிருக்கிறீர்களே..?

ஐயோ… சீமானை எல்லாம் ஒரு அரசியல்வாதியாகவே பேசாதீர்கள். ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருக்கு எதிர்வரிசையில் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் இருந்தார்கள். இப்போது பாருங்களேன்… ஆளுகிறவர் ஸ்டாலினாக இருந்தால் சீமானும் விஜய்யும் தான் எதிர்க்கட்சியாக இருப்பார்கள். அதிமுக-வும் திமுக-வும் வேண்டாம் என்ற மனநிலையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் எப்போதுமே இருப்பார்கள்.

இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராக ஒரு கழுதையை நிறுத்தினாலும் அவர்கள் அதற்கு வாக்களிப்பார்கள். அப்படித்தான் சீமான் 8 சதவீத வாக்குகளைப் பெற்றார். இம்முறை அதை விஜய் பெறுவார். விஜய் செய்தித்தாள் எல்லாம் படிக்கிறாரா என்று தெரியவில்லை. நம்முடைய சீமான் செய்தித்தாளை படித்துவிட்டு புரட்டுகிற புரட்டு தாங்கமுடியவில்லை.

அதிமுக-வை பழனிசாமி சரியான திசையில் வழிநடத்துவதாக நினைக்கிறீர்களா..?

அதனால் தானே அவ்வளவு பெரிய கட்சி அவரது கட்டுக்குள் இருக்கிறது. வெளியே போன ஓபிஎஸ்ஸும் தினகரனும் ஸ்டாலினை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதிலிருந்தே தெரியவில்லையா பழனிசாமி சரியான திசையில் தான் பயணிக்கிறார் என்று.

உதயநிதியை கமல்ஹாசன் அநியாயத்துக்கு புகழ்வதன் ரகசியம் என்னவாக இருக்கும்?

அந்த ரகசியத்தைக் கமலிடமே கேளுங்கள். நியாயமான புகழ்ச்சிக்கு தகுதியுடைய மனிதனை புகழ்ந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது புகழ்ச்சி எல்லாம் விருது கொடுப்பது போலத்தான். எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட நோக்கம் என்று வந்துவிட்ட பிறகு இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும்.

அறமான ஒரு மனிதர் தமிழகத்தை ஆளவேண்டும் என்று சொல்லும் உங்களால் அப்படியான ஒருவரை அடையாளம் காட்டமுடியுமா?

அறம் ஆளவேண்டும் என்பது எனது விருப்பம். இருப்பவர்களில் யாரை இவர் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறோமோ அவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியது தான்.

நன்றி: தி இந்து தமிழ்