சென்னை: அதிமுகவில் இருந்து  செங்கோட்டையன் எம்எல்ஏவை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில்,   ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன்  இணைந்து செங்கோட்டையின்  ஒன்றாக மரியாதை செலுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்து வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

இந்த நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான  செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  எடப்பாடி மீதான அதிருப்தி காரணமாக கடந்த சில வாரங்களாகவே  கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிரான செயலாற்றி வந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் என அனைவரையும் மீண்டும் இணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில், அதை  எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்து விட்டார்.

இந்த சூழலில் செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு அதிமுக-விலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தினால் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.