இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்ப்-ன் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு

Must read


புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளி அமெரிக்கரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கையினால் அமெரிக்காவில் தற்போது பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகமாகக் காணப்படுவதாக விமர்சித்துள்ளார். இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான நிர்வாக ஆணைகளில் கையெழுத்திட்டதை “குடியேறுவோர்களுக்கெதிரானது, குடும்பங்களைச் சீர் குலைக்க வழிவகுக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளனர்.

டிரம்ப் “ குடியேறியவர்களுகெதிரான” தனது நிலைப்பாட்டைத் தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளார், இதனால் அமெரிக்காவின் பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தோர் அமெரிக்க சமூகத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், நாடுகடத்தும் பணிக்கெனத் தனியாய் படை உருவாக்குதல் என்பது புலம்பெயர்ந்தோர் குடும்பங்களைக் குறிவைக்கும் செயலாகும். டிரம்ப் தன் வலிமையை காட்ட இது உகந்த வழியல்ல.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கிடையே தடுப்புச்சுவர் கட்டப்போவதாக அறிவித்துள்ள டிரம்ப்பின் அறிவிப்பையும் கடுமையாகச் சாடினார். ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற எல்லைச் சுவர் கட்டுவதற்காக, பொதுமக்களை வரிகட்டமாறு கட்டாயப்படுத்துவது தீர்வு ஆகாது. சுவர்கள் கட்டுவதற்கு மாற்றாக, நமது காலாவதியான குடியேற்றச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் களைய முற்பட வேண்டும். முறைகேடான குடியேற்றத்திற்கு வித்திடும் அடிப்படை அமைப்பு முறையில் உள்ள பிரச்சனைகள் கண்டறியப்பட வேண்டும். அகதிகளாய் வருபவர்களுக்கு மத அடிப்படையில் தடை செய்வதை கைவிட வேண்டும்.

அகதிகளை நாம் பெருந்தன்மையுடன் வரவேற்க வேண்டும், “என்று கமலா கூறினார். பொது பாதுகாப்பு, கல்வி, மற்றும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் சுகாதார சேவைகளை நகரங்களில் தடை செய்வது அதிபரின் பொறுப்பற்ற மற்றும் கொடுமையான நடவடிக்கை, ” என்றும் ஹாரிஸ் கூறினார். குடியேறியவர்கள் தம்மீது இழைக்கப்பட்ட குற்றங்கள்குறித்து புகாரளிக்க அஞ்சுவார்கள்.

மேலும் அந்தக் குடும்பங்கள் பயத்தில் நிம்மதியை இழந்து தவிப்பார்கள். தினமும் இரவில், நிம்மதியாய் தூங்க முடியாது. மேலும், அமெரிக்காவின் உள்ளூர் பொருளாதாரமும் பாதிக்கப்படும்” என்றும் ஹாரிஸ் கூறினார். இந்திய வம்சாவளி அமெரிக்கரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சியாட்டில் பிரதிநிதி பிரமிளா ஜெயபால், முன்னதாக டிரம்ப் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தவர்.

அதிபர் டிரம்ப் தனது “பிரிவினைவாத கொள்கைகளை” நடைமுறைப்படுத்தும் முடிவால் குடியேற்றம்குறித்த பிரச்சினைகளை உண்மையில் தீர்க்க முடியாது என்று பிரமிளா தெரிவித்துள்ளார். “அவரது குடியேறிய மக்களுக்கெதிரான கொள்கைகளை இரட்டிப்பாக்கி மக்களை ஒருவருக்கொருவர் விரோதித்துகொள்ள வழிவகுக்கின்றார். அமெரிக்காவின் சீர்குலைந்துள்ள குடியேற்ற அமைப்பில் சீர்திருத்தம் செய்து, நமது பொருளாதாரம், சமூகங்கள் மற்றும் குடும்பங்களின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விசயத்தில் டிரம்ப்பின் தலைமைப்பண்பு பூஜியமாகவுள்ளது.

அமெரிக்கா உலகின் முதன்மையான வல்லரசு நாடு. எனவே நம்மிடம் தஞ்சம் கோரும் அனைவருக்கும் ஒரு சரணாலயமாக அமெரிக்கா விளங்க வேண்டும். இந்திய வம்சாவளி உறுப்பினர்களுடன், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கையினை எதிர்க்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, மேலவை உறுப்பினர் சக் ஷூமர் மற்றும் காங்கிரஸ்காரர் ஸ்டெனி எச் ஹோயர் ஆகியோர் விமர்சித்துள்ளனர். “ஜனாதிபதி டிரம்ப்பின் திட்டங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு வழிவகுக்காது. ஒரு மனிதாபிமான, நடைமுறைச் சாத்தியமுள்ள மற்றும் பயனுள்ள வழியில் அமெரிக்காவின் குடியேற்ற அமைப்புமுறையை சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

More articles

Latest article