வாஷிங்டன்:

வரும் 2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக, தமிழகத்தை தாய் வழி பூர்வீகமாகக் கொண்ட கலிபோர்னியா செனட் (எம்.பி) கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸ், தாய் ஷியாமளா கோபாலன், தங்கை மாயா.

தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவுக்கு தனது 19 வயதில் கல்வி கற்க சென்றார். அப்போது ஜமைக்கானிலிருந்து அமெரிக்காவுக்கு கல்வி கற்க குடிபெயர்ந்த கறுப்பினத்தவரான டொனால் ஹாரீஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது மூத்த மகள்தான் கமலா ஹாரீஸ்.
சில மாதங்களுக்கு முன், 2020 நடக்கவுள்ள அதிபர் போட்டியிடப் போவதாக அறிவித்தபோதே, பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அப்போது தன்னைப் பற்றி உலகுக்கு இப்படி அறிமுகப்படுத்திக் கொண்டார் கமலா ஹாரீஸ்…

எனது தாத்தா, பாட்டி, அத்தை ,மாமா எல்லோரும் இந்தியாவில் உள்ள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தோடு எனக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், என் தாய் மொழி இந்திய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை எனக்கு அவர்கள் சொல்லியே வளர்த்துள்ளார்கள்.

என் தாத்தா இந்தியாவில் பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் என்பதை அறிவேன்.

என் தந்தை டொனால்டு ஹாரீஸ் எங்களுக்கு பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்தார். எங்களை முழுமையாக செதுக்கியவர் எங்கள் அம்மா தான்.
அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது என் அம்மாதான்.

என் அம்மாவின் கனவு நிறைவேறினால், முதல் இந்திய-அமெரிக்க அதிபர் என்ற பெருமை எனக்கு கிடைக்கும்
-இவ்வாறு அவர் மனம் திறந்து தன் உறவுகளை கோடிட்டுக் காட்டினார்.

இந்நிலையில், திங்களன்று தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதை, கமலா ஹாரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மன்னர் மார்ட்டின் லூதர் தினமான திங்களன்று ஏபிசி தொலைக்காட்சியின், ‘குட்மார்னிங் அமெரிக்கா’ என்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மக்களுக்காக போராட இத்தருணம் சரியானதாக இருப்பதாக என் உள் மனம் சொல்கிறது என்று தெரிவித்தார்.

‘மக்களுக்காக கமலா ஹாரீஸ்’ என்ற முழக்கத்துடன் தனது பிரச்சார இணைய தளத்தில் வீடியோவையும் வெளியிட்டார்.

உண்மை, நீதி, சரிசமம், சுதந்திரம்,ஜனநாயம் ஆகியவை வெறும் வார்த்தைகள் அல்ல…இவை அமெரிக்கர்களின் மகிழ்ச்சி. இப்போது இவை அனைத்தும் வரிசை கட்டி நிற்கின்றன என்று அந்த வீடியோ பதிவில் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27-ம் தேதி தன் சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாகவும், இதில் பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டும் எனறும் கமலா ஹாரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

செனட் ஆவதற்கு முன்பு அரசு வழக்கறிஞராகவும், சான் பிரான்ஸிஸ்கோ அட்டார்னியாகவும் கமலா ஹாரீஸ் பணியாற்றியிருக்கிறார்.

கலிபோர்னியா மாநில மக்கள் இவரை நன்கே அறிந்துள்ளனர். தான் எழுதிய நூல்களும், மக்கள் பணியும் அமெரிக்க முழுவதும் தன்னைக் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக்கையோடு முடிக்கிறார் 54 வயதான கமலா ஹாரீஸ்.