சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார். அதுபோல தமிழகத்தில், 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,
தமிழகஅரசின் நடவடிக்கையால் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவது பெருமளவு குறைந்துள்ளது என கூறினார். குடிமராமத்து பணிகளால் ஏரிகள், நீர் நிலைகள் வேகமாக நரம்பி வருகின்றன. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக, தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருப்பதாக கூறியவர், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை என்றவர், தற்போதைக்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது, இதனால் சென்னை மக்கள் பயப்படத் தேவையில்லை என்றவர், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றில் குறைந்தளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்றார்.
மேலும், மழை வெள்ளம் காரணமாக, தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம், சோமனூரில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள அர தயாராக இருப்பதாகவும், மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம், பேரிடர் காலத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.