சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த்கை தமிழகத்தில் பாஜகவுக்கு பாமகவால் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 9 காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று வெற்றி வேட்பாளர்கள் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்,
” காந்தி, நேரு போன்ற பல தலைவர்களால் உருவாக்கப்பட்ட தேசம் நம் நாடு. நாம் எல்லோருக்குமான நாடாக இருந்த இந்தியாவை கூறுபோட நினைத்த பாசிச சக்தி பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் ஒரு படிப்பினையை இந்திய மக்கள் கொடுத்து உள்ளார்கள்.
பாஜகவினர் ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியான பைசாபாத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்கள். மோடியை ராமரும் கைவிட்டுவிட்டார். விவேகானந்தரும் நிராகரித்து விட்டார்.
ராமரும், விவேகானந்தரும் நிராகரித்த பிறகு சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் மோடியை ஏன் ஆதரிக்க வேண்டும்? இவர்கள் எதற்காக அவர்களுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த் வரை பா.ம.க. வாக்கு வங்கிகள் உள்ள இடங்களில்தான் பாஜக 2-ம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அவைது அனைத்தும் பா.ம.க.வின் வாக்குகள்தான்.
அண்ணாமலை பிரியாணி ரெடிபண்ணி வைத்திருக்கிறேன் என்றார். தேதி குறிக்கப்போகிறோம். எங்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்ல இருக்கிறோம். அவரை தயாராக இருக்கச்சொல்லுங்கள்.
அ.தி.மு.க.வை தமிழக மக்கள் நிராகரிக்க தொடங்கி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு ஏமாந்த இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விஷயம். அவர் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான்”
என்று கூறியுள்ளார்.