காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு

Must read

சென்னை:
காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து 25 இடங்களில் போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, சோனியாகாந்தியால் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியதால், யாரையும் ஒருமனதாக தேர்வு செய்து அறிவிக்க முடியவில்லை.

அதன் அடிப்படையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்? என்பதை காங்கிரஸ் மேலிடம் இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article