சென்னை: சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம், கோவில்களில் பக்தர்கள் மரணம் உள்பட பல்வேறு கேள்விகளை சட்டப்பேரவையில் எழுப்பிய  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

ரூ.50 கோடியில் 8 புதிய சமத்துவபுரங்கள் கட்டும் பணி அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.177.85 கோடி மாநில சிறப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஏரிகள் புனரமைப்பு பணி, அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்படும்18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.177.85 கோடி மாநில சிறப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஏரிகள் புனரமைப்பு பணி, அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்படும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம் வருமாறு,

கோயில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்து வருவதாக குற்றம் சாட்டியதுடன், அவர்களின் பாதுகாப்புக்கு அரசு என்ன செய்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,  கோயில்களில் பக்தர்களுக்க தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால்தான்  பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். நெரிசல் காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி கோயில்களில் பக்தர்கள் உயிரிழக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தபோது உயிரிழந்துள்ளனர் என்றும், கோயில்களில் இறைபசியுடன் வயிற்றுப் பசியும் போக்கப்பட்டு வருகிறது என பதில் அளித்தார்.

தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் உள்ளதா என்று உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கேள்வி எழுப்பிய நிலையில்  அதற்கு பதில் கூறிய வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்,   முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, இதுவரை 72,664 மாணவர்கள் பயின்று பட்டம் பெற்றுள்ளனர். இதன்வழி, ஆண்டுதோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மாணவர்கள், வேளாண்மை படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகை கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது.கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது என தெரிவித்தார்

விவசாயிகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்படுமா என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி,   “2 லட்சம் விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்து, இதில் 1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்.

தென்மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் எ.வ.வேலு,  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்கள். அதன்படி, தென் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட பணிக்காக நில எடுப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் நடைபெறும் என்றார்.

திருச்செங்கோடு ஏரியை சுத்தம் செய்யவேண்டும்  அப்பகுதி எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதில் அளித்த அமைச்சர்  கே.என்.நேரு,  நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள ஏரியை சுத்தம் செய்ய, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் திருச்செங்கோடு ஏரி சுத்தம் செய்யப்படும் என்றார்.

சுயமரியாதை திருமணங்கள் குறித்த உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  மூர்த்தி : “தமிழ்நாட்டில், 2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கேள்வி நேரத்தில் பதில்கள் தெரிவிக்கப்பட்டன.