நெட்டிசன்:

டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர் – பதிவு

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா.. ஆம் என்று சொல்லுமுன் யாரை என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அதை தெரிந்து கொண்ட பின்பும் ஆம் என்று சொன்னால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இல்லையென்றால்… its never late இப்போதே நேரம் தாழ்த்தாமல் காதலிக்க ஆரம்பியுங்கள்.

காதலித்தவர்களுக்குத்தான் தெரியும் காதலின் அருமை. அது தரும் ஊட்ட சக்தி, அது செய்யும் மாயை, இளகிய மனம், தான் வேண்டியதை அடைவதில் உறுதி, எதையும் செய்யத் துணியும் திடம், இது தான் எனக்கு வேண்டுமெனும் தெளிவு, அந்தக் காதலுக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராகும் தியாகம். இன்னும் இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

இந்தக் காதல் என்பது பொதுமறை. படித்தவர், படிக்காதவர், ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு இதற்கு இல்லை.

போதும் இந்த வாழ்க்கை என்று சலித்தவனுக்குக்கூட காதல், வாழ்க்கையில் அழகிய பிடிமானத்தைத் தந்து விடும். (zero) ஜீரோவாக இருப்பதாக நினைப்பவர்களைக்கூட ஹீரோவாக மாற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த இந்தக் காதலை, அந்த அழகிய அன்பை யாரோ ஒருவர் உங்களுக்குத்தர வேண்டுமென்பதோ, யாரோ ஒருவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டுமென்பதோ இல்லை. உங்களுக்கு நீங்களே கொடுத்து பாருங்கள். ஆம்…உங்களை முதலில் காதலியுங்கள். அது உங்களுக்கு செய்யும் மேஜிக்கை, அது தரும் ஆற்றலை உங்களால் அணு அணுவாக உணர முடியும்.

என்றாவது நீங்களே உங்களிடம் எது உங்களை நீங்களாக இருக்கச் செய்கிறது, எது உங்களுக்கு திருப்தி தரக் கூடியதாக இருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்களா. பொதுவாக பலரும் பணம் பதவி படிப்பு இதை வைத்துத்தான் தங்களை யார் என்று நிர்ணயம் செய்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து தாங்கள் யார் என்பதை நிர்ணயிக்கிறார்கள். மற்றவர்கள், அவன் கெட்டிக்காரன் என்று கூறினால் தான் கெட்டிக்காரன் என்பதாகக் கருதி கொள்கிறார்கள். அவன் அத்தனை சமர்த்து அல்ல என்றால் தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நினைத்து சுருங்கிப் போகிறார்கள்.

மகிழ்ச்சியின் முதலான இரகசியம் உங்கள் மீது நீங்கள் காதல் கொள்வதில் இருக்கிறது என்கிறார் ராபர்ட் மோர்லி. உண்மையில் தன்னை விரும்பக் கூடிய ஒருவனாலேயே, தன்னை தன் குறைநிறையோடு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவனாலேயே, மற்றவர்களை மகிழ்ச்சியோடு விரும்ப முடியும். அவர்களையும் அவர்களது குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்ள முடியும். தன்னை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவனாலேயே தன்னை சுற்றி இருக்கும் எதையும் யாரையும் சரியாக நிர்வகிக்க முடியும். தன்னை ரசித்து தன்னை எப்படியெல்லாம் முன்னேற்றிக் கொள்ளலாம் என அதற்கான வழிகளை சிந்தித்து, எதிலும் தான் விரும்பிய வெற்றியை அடைய முடியும்.

வெனிசுலாவை சேர்ந்த அந்த இளம் பெண்ணிற்கு ஓர் அழகிய கனவு இருந்தது. தான் அனைவருக்கும் பிடித்தமானவளாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. அதுவே தன்னை யார் என்று நிர்ணயிப்பதாக எண்ணுகிறாள். அதனால் ‘goody two shoes’ என்பதாக மற்றவர்களுக்கேற்ப தன்னை சுருக்கியும் நீட்டியும் வளைந்து கொடுத்தும் மற்றவர்களுடைய கருத்தை வைத்து தான் யார் என்பதான தன் கருத்தை மாற்றிக் கொள்பவளாக வலம் வருகிறாள்.

இந்த சூழலில் அவளை விரும்புவதாகக் கூறும் ஓர் இளைஞனை அவளுக்கும் பிடித்துப் போக இருவரும் சந்தோஷமாகச் சுற்றி வருகிறார்கள். தன்னை ஒருவன் விரும்புகிறான் என்று அறிந்ததும் தான் மிகவும் விரும்பப்படக் கூடியவள் என்று நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். தன் மதிப்பும் மரியாதையும் மகிழ்ச்சியும் அவன் காதலிலேயே இருக்கிறது என உருகிப் போகிறாள். அந்தக் காதல் அவளை ஒரு தேவதையாக அவள் மனதில் உலா வரச் செய்கிறது. அவன் மீது அதீத அன்பை பொழிகிறாள். எல்லாம் மகிழ்ச்சியாக தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் அவள் காதலன் எந்தக் காரணமும் சொல்லாமல் அவளை நிராகரிக்கும்வரை.

பிறரது கருத்துக்களை வைத்தே தன்னை மதிப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு தன்னை விரும்பிய ஒருவன் இப்போது விலகி விட்டான் என்றதும் தன்னை யாருக்கும் பிடிக்காது என்று எண்ணி தனக்குள் சுருண்டு விடுகிறாள்.

தான் மற்றவர்களால் விரும்பப்பட வேண்டும் என்பதற்காக தனக்கென ஒரு கருத்தை வைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு பதிலாக அவள் தன்னை விரும்பி, அவள் அவளாகவே இருந்து கொண்டு பிறரால் நேசிக்கப் படக்கூடியவளாக இருக்க வேண்டும் என்று அவள் உறுதியாக நினைத்திருந்தால் அவள் ஆழ்மனம் அதற்கான வழிகளையும், சூழல்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். அது அவளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும், அவளுக்காக மற்றவர்கள் அவளை விரும்பக் கூடியதாகவும் அமைந்திருக்கும்.

ஆனால் அத்தனை மகிழ்ச்சியும் பிறர் தருவதாகவே நினைத்ததால் ஒரு காதல் தோல்வி அவளுக்கு மிகப் பெரும் சுமையைத் தருகிறது. அதே நேரம் அவளது சகோதரி எப்போதும் எந்தக் கவலையுமின்றி இருப்பதைப் பார்க்கும் போது, அவளுடைய மகிழ்ச்சி என்பது யாரோ ஒருவரையோ ஏதோ ஒன்றையோ சார்ந்து இல்லை, அவளது மகிழ்ச்சி அவள் நேர்மறை எண்ணங்களிலும் தன்னம்பிக்கையிலும் இருந்து ஏற்படுகிறது என்பதை உணர்கிறாள். அதேபோல் தனக்கான அங்கீகாரமும் மகிழ்ச்சியும் தன்னிடம் இருந்து தான் வர வேண்டும் என்பதையும் அந்தக் கணத்தில் அவள் புரிந்து கொள்கிறாள். இந்த பிரச்னைகளிலிருந்து மீண்டுவர வேண்டுமென திடமாக இருந்து மீண்டு வரும்போது தான் அவளுக்கு தன்னுடைய மனஉறுதியும், மகிழ்ச்சியும், தன் திறமையும், தன் வாழ்க்கையின் அர்த்தமும், தான் ‘யார்’ என்பதும் பிடிபடுகிறது.

பொதுவாக கண்ணுக்கு முன்னால் இதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்தீர்கள் என்றால் அந்த ஒன்று எப்போதுமே காணல் நீராக கண்ணா மூச்சி விளையாடக் கூடியதாகவே இருக்கும்.

உண்மையில் மகிழ்ச்சி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது. உங்களிடமிருந்து வர வேண்டியது. தவிர, உண்மையில் உங்களை நீங்கள் எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள் என்பதிலேயே இந்த பிரபஞ்சத்தை பற்றிய உங்கள் பார்வையும் இந்த பிரபஞ்சத்திற்கான உங்கள் சேவையும் இருக்கிறது.

ஒரு சிறு குழந்தையின் உடல் வளர்ச்சி இயல்பாக உயரமாக, பருமனாக, திடமாக வளார்வதைப்போல் ஒருவனின் எமோஷனல் வளர்ச்சியும், முன்னேற்றமும் தானாக நடக்கக் கூடியது என பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அது உங்களை நீங்கள் எப்படி தன்னம்பிக்கையோடு உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது.

உங்கள் நெருங்கிய நட்புடன் எவ்வளவு நெருக்கமாக பழகுகிறீர்களோ அந்த ஆளவு அவரைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். அதைப் போல உங்கள் நேரத்தையும் எனர்ஜியையும் உங்களைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள பயன்படுத்தும்போது, நீங்கள் உங்களிடம் அதிகமாக நெருக்கமாகும்போது உங்கள் குறைநிறை தெரிந்து அதை சரி செய்து உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்வீர்கள். சுய அலசலும் சுய முன்னேற்றமும் சுய நட்புமே ஒருவன் தனக்கு கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்க முடியும்.

தன்னை முன்னிறுத்த நினைக்கும் போது பலருக்கும் வரும் தடங்கல் அது சுயநலமாகி விடுமோ என்பது தான். நான் என்னைக் கவனிப்பதே இல்லை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பதையே தியாகமென்றும் சிறந்தது என்றும் கேட்டுக் கேட்டு வளர்ந்ததனால் உங்களையறியாமல் உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த உடனேயே அது சுயநலமோ என உங்கள் மனம் இயல்பாக நினைத்து மருகும்.. விமானம் புறப்படுமுன் பாதுகாப்பு அம்சங்களை அறிவிக்கும்போது ‘உங்களுக்கு நீங்கள் உதவி விட்டு பிறருக்கு உதவுங்கள் என்று சொல்வதைக் கவனியுங்கள். உண்மையில் தன்னை முன்னிறுத்தி முன்னேற்றிக் கொள்ளும் ஒருவனாலேயே நிச்சயம் திடத்தோடும் வளத்தோடும் பிறருக்கு உதவ முடியும். தன்னை ஒரு முன் மாதிரியாக பலரின் முன்னேற்றதிற்கு முன் நிறுத்தவும் முடியும்.

இதில் முக்கியமானது என்னவென்றால் உங்களை நீங்களே விரும்பி முன்னேற்றிக் கொள்ளும் போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்கிறார்களோ அப்படி இல்லாமல் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி உங்களை நீங்களே சிறந்த முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த ‘நீங்கள்’ உங்கள் சுய பிரதிபலிப்பாக போலி அற்றதாக இருக்கும். அது நீங்கள் விரும்பிய அனைத்தையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். மகிழ்ச்சி நிறையும்.

– ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad