சென்னை,
கடந்த வாரம் தமிழக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சேகர் ரெட்டியிடம் இருந்து 177 கிலோ தங்கம் மற்றும் 130 கோடி பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சேகர் ரெட்டி மற்றும் 5 பேர் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் தனக்கு முதல்வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று சேகர் ரெட்டி மனு செய்திருந்தார். அதையடுத்து அவருக்கும், மேலும் 4 பேருக்கும் புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கி சிபிஐ சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேகர்ரெட்டியுடன் அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
சேகர் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐ மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சேகர் ரெட்டி, சீனிவாசலு உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையும் வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால் வழக்கை விசாரித்த சிபிஐ முதன்மை நீதிமன்றம் இரு மனுக்களையும் வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சேகர் ரெட்டிக்கு கருப்புப்பணத்தை மாற்ற சில வங்கி அதிகாரிகளும் உதவியுள்ளனர். அவர்களை யும் கைது செய்ய வேண்டியதிருப்பதால், விசாரணைக்கு சிபிஐ அவகாசம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.