சர்ச்சைக்குறிய காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் டைரியில் ஊடகவியலாளர்கள் சிலரது பெயர் இருந்ததாக சமூக வலைதளங்களில் போலி பட்டியலை பரப்பியது அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு என்பது அம்பலமாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது.
அதில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு சேகர்ரெட்டி வழங்கிய லஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் பட்டியலில், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் “சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்கள்” என்ற குறிப்புடன் சமூகவலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியானது.
அதில் பிரபல பெற்ற ஊடகவியலாளர்கலான, தந்தி தொலைக்காட்சி பாண்டே மற்றும் ஹரிஹரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கார்த்திகைச் செல்வன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை அடுத்து, அதை திசைத்திருப்ப ஊடகவியலாளர்கள் சிலரது பெயருடன் பட்டியல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அடையாளத்தை மறைத்துக்கொண்டிருக்கும் சிலர் போலியான இப்பட்டியலை சமூகவலைதளங்களில் பரப்புகிறார்கள். இதையும் நம்பும் அப்பாவிகள் இந்தப் பட்டியலை பகிர்ந்துவருகிறார்கள்.
சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை திசைத்திருப்பும் முயற்சியே இது” என்று தெரிவித்தனர்.
இது குறித்த செய்தியை பத்திரிகை டாட்காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், ; “சேகர் ரெட்டியின் டைரி வெளியானதால் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை திசைத்திருப்பவே அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, ஊடகவியலாளர்கள் பெயர்களுடன் போலி பட்டியலை தயாரித்து சமூகஊடகங்களில் பரப்பிவிட்டது” என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஐ.டி. விங் பொறுப்பாளர் பிரசாத் என்பவர்தான் இந்த போலியான பட்டியல் சமூகவலைதளங்களில் பரவ காரணம் என்று கூறிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அவரிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டது. அவர் தவறாக போலி பட்டியலை வெளியிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.