திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது : காவிரி பிரச்னை கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்டது கிடையாது. இதை நாம் பிறந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். இப்போது பாஜக அரசு மத்தியில் ஆட்சி செய்கிறது.

கடந்த 10 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது. அன்றும் இதே காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை இருந்தது. அப்போது  தீர்வு காண என்ன முயற்சி எடுத்தார்கள்?

நாங்கள் போராடுகிறோம் என்றால் அதிகாரமற்றவர்கள் என்பதால் போராடுகிறோம்,

ஆனால் அதிகாரித்தில் இருந்த தி.மு.க. அப்போது தீர்வு காணாமல் இப்போது நடைபயணம், போராட்டம், மறியல் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. இப்போது திமுக   மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைந்தால் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று சொல்லுமா.

காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு பெற்றுத் தரவில்லை என்பதால் தான் மாணவர்களும், இயக்கத்தினரும் போராட்ட களத்தில் இறங்கினர். அவர்களாக போராடி பெற்றுக் கொள்ளட்டுமே என்று கூட அரசு விடாமல் வழக்கு தொடுக்கிறது. மெரினா கடற்கரையில் போராட தடை விதிக்கிறது. மெரினாவில் போராட அனுமதி கொடுத்துப் பாருங்கள் உலகமே திரும்பிப் பார்க்கும் போராட்டத்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்.

அதிமுக ஏதோ கடமைக்காக உண்ணாவிரதம் நடத்தி இருக்கிறது. அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது.

தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்.

நிலக்கரிக்கோ துறைமுகத்திற்கோ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு முதலாளி லாபமடைவதற்காக இந்த மண்டலத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுமே புற்றுநோய், சுவாசப் பிரச்னை, தோல் நோய்க்கு ஆளாவது சரியா. இது தான் கடலூர் சிப்காட், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எல்லாமே இப்படித் தான். அங்கு போய் வாழ்ந்து பார்த்தால் தான் அந்த பாதிப்பு புரியும். வளர்ச்சி என்கிற பெயரில் மண்ணின் வளங்கள் கெடுக்கப்படுகின்றன என்பது தான் உண்மையான விஷயம்.

ஆகவே தான் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை எதிர்க்கிறோம்.

காவிரி பிரச்னையை திசைதிருப்புவதற்காக கன்னடர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக அரசின் இயலாமை தான் காரணம். தமிழகம் மீது பாஜகவின் மேலாதிக்கம் இருப்பதைத் தான் இது காட்டுகிறது”  என்று சீமான் தெரிவித்தார்.