பனப்பாக்கம்
தமிழக அரசு தாலிக்கு தங்கம் கொடுத்ததுடன் மக்களைக் குடிக்க வைத்து பெண்களின் தாலியை இழக்க வைத்தும் சாதனை புரிந்துள்ளது என சீமான் கூறி உள்ளார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக என இரு அணிகள் களத்தில் உள்ளன. இந்த இரு அணியிலும் சேராமல் நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் சீமான் பரப்புரை செய்து வருகிறார். அவ்வகையில் அவர் சோளிங்கர் தொகுதி வேட்பாளர் பாவேந்தரை ஆதரித்து படைப்பாக்கம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
சீமான் தனது பரப்புரையில், “ நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் விவசாய வேலை அரசு வேலையாக அறிவிக்கப்படும். இந்து மதக் கடவுளான கிருஷ்ணர், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம், கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுபிரான் ஆகிய அனைவரும் ஆடுமாடுகள் மேய்த்தவர்கள்தான்; அவ்வாறு இருக்க ஏன் நீங்கள் எல்லாம் ஆடு, மாடு மேய்க்கக்கூடாது?.
நாம் தமிழர் கட்சி தற்போது ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி தனித்து போட்டியிட்டு வருகிறது. தமிழ் நாட்டில் மாடுகள் மூலமாக பால் விற்பனையில் 3 லட்சம் கோடி வருவாய் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்கிறது’
பொதுவாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் ஒவ்வொரு தெருவுக்கும் 2 டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளனர். தமிழக அரசு தாலிக்கு தங்கம் கொடுப்பது சாதனை என்றால் டாஸ்மாக் கடை மூலமாக 2 லட்சம் பெண்களின் தாலியை இழக்க வைப்பதும் தமிழக அரசின் சாதனைதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.