புதுச்சேரி:
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் தேமுதிகவின் நிலைப்பாடு தொடர்பாக மாநில செயலர் வி.பி.பி வேலு இன்று (மார்ச் 11) கூறுகையில், “புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. முதல்கட்டமாக ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கிறோம். பாகூரில் நான் போட்டியிடுகிறேன். உப்பளம் – சசிகுமார், காலாபேட் – ஹரிஹரன் என்ற ரமேஷ், நெடுங்காடு – ராம்டீம் ஞானசேகர், திருநள்ளாறு – ஜிந்தா என்ற குரு ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

ஓரிரு நாட்களில் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். பிரச்சாரத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் புதுச்சேரிக்கு வரவுள்ளனர். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து தேமுதிக குரல் எழுப்பும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, 5 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.