சிறப்புக்கட்டுரை: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன்
தாஜ்மகாலை மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகளிலும் சிறிய படங்களிலுமே பார்த்திருந்த தால் அதன் மேல் எனக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது இல்லை.
‘என்னடா இதைப் போய் தலையில தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே’ என்று தான் நினைத்திருந்தேன்.
அதனால், 2005ல் நான் முதல் முறை டெல்லி செல்லும் போது மிகவும் அசிரத்தையாகத் தான் ஆக்ரா சென்றேன். ஆனால் அதை முதன் முறை பார்கும் போது அதன் பிரம்மாண்டம், தாஜ்மகால் பற்றிய எனது பழைய கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கியது.
ஒரு நாளில் மூன்று நிறங்களை அது பிரதிபலிக்கும் என்று சொல்வார்கள். அதிகாலையில் இளஞ்சிவப்பு சாயலிலும், பகலில் பால் வெள்ளை சாயலிலும், இரவு, நிலவொளியில் தங்க நிற சாயலிலும் தெரியும் என்பார்கள்.
நான் சென்றது நல்ல வெயிலடிக்கும் பகல் வேளையில். அப்போது அது பால் வெள்ளையாய் பிரம்மாண்டமாய் அமர்ந்திருந்தது. அதன் அழகைத் தாண்டி அதன் வரலாறு இன்னும் சுவாரசியமாக்கும் என்று நினைத்ததால் ஒரு கைடை அமர்த்திக்கொண்டேன்.
யமுனையை ஒட்டி நடைபோட்டு தாஜ்மகாலை தூரப் பார்வையில் ரசித்துக்கொண்டே செல்லும் போது, தாஜ்மகால் 1653ல் கட்டி முடிக்கப்பட்டது என்றும், அதை கட்டி முடிக்க சுமார் 22 வருடங்கள் ஆனது என்றும் சொன்னார். அதை கட்ட சுமார் 22000 உழைப்பாளிகள் பயன்படுத்தப்பட்டார்கள் என்றும், இன்னொரு தாஜ்மகால் உருவாகக்கூடாது என்பதற்காக அவர்களது விரல்கள் வெட்டப்பட்டது என்ற செய்தி வெறும் வதந்தி என்றும் சொன்னார்.
தாஜ்மகால் சுமார் 240 அடி உயரம் என்றும் அதன் உள் சுற்றுசுவர் மட்டுமே 82 அடி உயரம் என்றார். பிளாஸ்டிக் தாஜ்மகாலைப் பார்த்து அதைக் கற்பனை செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு அதன் வடிவ அளவு தெரியாது. அதனால் தான் அதை நேரில் பார்க்கும் போது மிகப் பிரம்மாண்டமாய்த் தெரிகிறது என்று நினைக்கிறேன்.
அதன் அருகில் அமைக்கப்பட்ட நான்கு தூண்கள் மட்டும் சுமார் 130 அடி உயரம் இருக்கும் என்றார். நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் தூண்கள் கட்டிடத்தின் மேல் விழுந்து கட்டிடத்திற்கு பாதிப்பேற்படுத்தக்கூடாது என்பதற்காக, அதை வெளிப்புறம் சாய்வாக இருக்குமாறு அமைத்திருப்பதாகச் சொன்னார்.
அதன் நீர் நிலையைத் தாண்டி அதன் நுழைவில் அடி எடுத்து வைக்கும் முன், செவ்வக வடிவில் நுழைவாயிலின் தரையிலிருந்து கிட்டத்தட்ட அதன் புகழ்பெற்ற வெங்காய டூம் வரை செல்லும் பார்டரை சுட்டிக்காட்டினார்.
அதில் வேற்று மொழி எழுத்துகள் சிலவற்றைப் பார்க்க முடிந்தது. அது குரானில் இருந்து எடுக்கப்பட்ட வாசகம் என்றார். அந்த எழுத்துகள் கீழிருந்து பல அடி உயரம் மேல் செல்கிறது. வழக்கமாக கீழிருந்து மேலே செல்ல செல்ல எழுத்துகள் சுருங்கி படிக்க சிரமமாக இருக்கும். அதை உணர்ந்து, படிக்க சிரமமாக இல்லாதவாறு எழுத்துக்களின் அளவை அற்புதமாக்க் கட்டமைத்திருக்கிறார்கள் என்றார்.
உள்ளே சென்று சமாதிகளைப் பார்வையிடும் போது, ஷாஜகான் தனக்காக கருப்புத் தாஜ்மகால் ஒன்றைக் கட்ட விரும்பினார் என்றும், அவருக்குப் பின் வந்த அவுரங்கஜீப் அதற்க்கு அனுமதிக்க வில்லை என்றும் சொன்னார். அதிகாரப் போட்டி காரணமாக, ஷாஜகான், தனது கடைசி காலகட்டத்தில் தனது மகன் அவுரங்கஜீப்பால் ஒரு அரண்மனையில் சிறைவைக்கப்பட்டார் என்றும் அங்கிருந்து ஒரு கண்ணாடியின் மூலம் தாஜ்மகாலை சாகும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் சொன்னார்.
1983ல் தாஜ்மகால் UNESCOவால் world heritage siteடாக அறிவிக்கப்பட்டது என்றார். (ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான UNESCO, உலகில் ஒரு சில இடங்களை, கலாச்சார, வரலாற்று மற்றும் விஞ்ஞான அடிப்படையில் world heritage site என்று அறிவிக்கும்.
அப்படி என்றால் அது மனிதகுலத்திற்றகு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றும் அதனால் அது உலகலாவிய ஒப்பந்தங்கள் மூலம் காக்கப்படும் என்றும் அர்த்தம்.) இந்தியாவிலேயே சுற்றுலாப் பயனிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடம் தாஜ்மகால் தான் என்றார்.
தாஜ்மகாலைப் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தேன் என்று சில வெள்ளையர்கள் கூறுவதைப் பார்க்கப் பெருமையாக இருக்கும் என்றார். அவர் ஒரு கைடாக மட்டும் இல்லாமல் மிகுந்த ஆர்வத்தோடு ஒவ்வொன்றையும் விளக்கியதைக் குறிப்பிட்டு, உங்களுக்கு தாஜ்மகால்னா அவ்வளவு பிடிக்குமா என்றேன்.
டில்லி, ஆக்ரா சுற்றி நிறைய ஃபோர்ட் இருக்கு, வேறு சில வரலாற்றுக் கட்டிடங்களும் உண்டு. அதற்கெல்லாம் கிடைக்காத வரவேற்ப்பு, தாஜ்மகால்க்கு மட்டும் ஏன் இருக்கு. ஏன்னா இது வெறும் வரலாற்றுக் கட்டிடம் மட்டும் அல்ல, இது காதலின் சின்னம். காதலுணர்வும் இந்தக்கட்டிடத்தில் கலந்திருப்பதால் தான் இதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்றார்.
கிட்டத்தட்ட அரை நாளை அங்கு கழித்த பின் அங்கிருந்து கிளம்பினேன். 2005ல் இருந்து இன்று வரை பனிரெண்டு வருடங்களாக தாஜ்மகாலை நான் தரிசித்த நிகழ்வு என் மனதை விட்டு நீங்காமல் இன்னும் பசுமையாக இருப்பதற்கு ஒரு வேளை அந்த கைட் சொன்னது போல் காதல் தான் காரணமோ என்னவோ. துரதிஷ்டவசமாக, இப்பொழுது, தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உத்திரப்பிரதேச பிஜேபி அரசு.
அவுரங்கஜீப்பை வரலாறு ஒரு மதவெறியனாக அறிமுகப்படுத்துகிறது. அவருக்குத் தாஜ்மகாலை சுத்தமாகப் பிடிக்காது. அதை இடிக்கலாமா என்று கூட யோசித்தார். அதனால் தான் ஷாஜகானின் கருப்புத் தாஜ்மகால் கனவை அவர் அங்கீகரிக்கவில்லை. (ஒரு வேளை ஷாஜகானுக்குப் பிரியமான தாரா அடுத்த மன்னராயிருந்தால் நமக்கு இன்னொரு தாஜ்மகால் கிடைத்திருக்கலாம்.)’
இப்போது மதவெறியரான யோகிக்கும் தாஜ்மகாலைப் பிடிக்கவில்லை. எந்த மதத்தை சேர்ந்த வராயினும் மதவெறியர்களின் சிறு மூளைக்கு கலைகளை ரசிக்கும் ரசனை இருக்காது என்பதற்கு இதுவே சான்று. இந்த முட்டாள் மதவாத பிஜேபி அரசால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தோடு சேர்ந்து இப்பொழுது கலைக்கும் ஆபத்து வந்திருக்கிறதே என்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதற்காக யோகியை விமர்சிப்பதை விட, அவரையும், அவரை முதல்வராக்கியவரையும் தேர்ந்தெடுக்குமளவே அறிவு படைத்த மக்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்ற தகவலே மிகவும் கவலையளிக்கிறது.
அது காமரா ஃபோன்கள் அதிகம் வராத கால கட்டம் என்பதால் நான் ஃபிலிம் காமராவில் தான் சில புகைப்படங்கள் எடுத்தேன். அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அதை உடனடியாகத் தேடி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே தாஜ்மகால் இருக்கும் இடத்தில் சிவன் கோவில் இருந்தது என்று திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். இப்பொழுது அதை சுற்றுலா தள பட்டியலில் இருந்தும் தூக்கி விட்டார்கள். அனேகமாக அவர்களது அடுத்த திட்டம் பாபர் மசூதி போல் இதையும் இடிப்பதாய்த்தான் இருக்க வேண்டும்.
அதனால், நீங்கள், வரலாறையும், வரலாற்றுக் கட்டிடக் கலையையும், கூடவே காதலையும் ரசிப்பவராய் இருந்தால், உடனே ஆக்ரா சென்று தாஜ்மகாலை கண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் தாஜ்மகாலை நேரில் காணும் வாய்ப்பு இனி உங்களுக்குக் கிடைக்காமல் கூடப் போகலாம்.