புதுடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ், மிரினால் பாண்டே மற்றும் வேறுசிலரின் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஸஃபார் அகா மற்றும் கேரவன் ஊடகத்தின் ஆசிரியர் ஆனந்த் நாத் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 35 வயதான ஆர்பிட் மிஸ்ரா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், முதல் தகவல் அறிக்கை சம்பவம் நடைபெற்ற டெல்லிக்கு பதிலாக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதியப்பட்டுள்ளதுதான். அதேசமயம், நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் வழக்குப் பதிவுசெய்து, பின்னர் அதை சம்பந்தப்பட்ட காவல்துறை மண்டலத்திற்கு மாற்ற முடியும் என்ற நுட்பத்தை உ.பி. மாநில காவல்துறை கையாண்டுள்ளதாகவும் சில சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அறியக்கூடிய குற்றங்கள் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கான புகாரை அளித்த ஆர்பிட் மிஸ்ரா கூறியுள்ளதாவது, “எனது புகாரின் காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்றுள்ளார் அவர்.