டில்லி

ன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல்  அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன.

இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.  இந்த கூட்டம் இவ்வாண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.   அதன் பிறகு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்த ஆதரவைக் காட்ட 18 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட 16 கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கப் போவதில்லை.  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே முடிவை ஆம் ஆத்மி கட்சி மற்றும் சமீபத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளும் எடுத்துள்ளன.