சென்னை

ன்று பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்குவதால் அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். இதையொட்டி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக மோடி இன்று  தமிழகத்துக்கு வருகிறார்.

இன்று பிற்பகல் 2.45 மணிக்குச் சென்னை வரும் மோடி, கல்பாக்கம் சென்று அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தைப் பார்வையிடுகிறார். பிறகு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்கிறார்கள். கூட்டம் முடிந்ததும் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலமாகத் தெலுங்கானா செல்கிறார்.

சென்னையில் பிரதமரின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்பட மொத்தம் 15 ஆயி ரம் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அவரது பாதுகாப்புக்கு 5 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மொத்தம் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டு உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் காவல்துறையினரால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ‘டிரோன்’கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை நகரில் இந்த தடை உத்தரவு ஏப்ரல் 29-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறி ‘டிரோன்’கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.