உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ. 14850 கோடி செலவில் 296 கி.மீ. நீளத்துக்கு போடப்பட்டுள்ள பண்டல்கந்த் எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்ட 5 நாளில் பாலம் பாலமாக துண்டானது.

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலைக்கான அடிக்கலை நாட்டினார் 28 மாதங்களில் சாலை பணி நிறைவடைந்து இந்த மாதம் ஜூலை 16 அன்று மோடி தலைமையில் கோலாகலமாக துவக்க விழா நடைபெற்றது.

துபாய் மற்றும் ஜப்பானை மிஞ்சுமளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் புதிதாக போடப்பட்ட இந்த சாலை ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளது.

உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி. வருண் காந்தியும் இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உ.பி. முதல்வரை கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது நான்கு வழிச் சாலையாக உள்ள இந்த நெடுஞ்சாலை விரைவில் ஆறு வழி சாலையாக மாற தேவையான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் நிலையில் புதிதாக போட்ட சாலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அம்மாநில மக்களிடம் மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பேசு பொருளாகி இருக்கிறது.