ஸ்ரீநகர்: காஷ்மீரின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு வெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, தங்கள் தலைவர்களான ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோரை விடுவிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல், காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் தங்களின் கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி, இன்னும் சிறைவைக்கப்பட்டுள்ள தங்கள் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரை விடுவிக்க வேண்டுமென ஆளுநர் சத்யபால் மாலிக்கை வலியுறுத்தினர்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்து, அவர்களுக்கான பேச்சுரிமை மற்றும் நடமாட்ட உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஜனநாயகம் மீள்கொணரப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

கட்சி அலுவலகத்தில் நடந்த சந்திப்பானது, தேசிய மாநாட்டுக் கட்சியின் பிராந்திய தலைவர் தேவேந்தர் ரானாவின் தலைமையில் நடைபெற்றது. இவர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.