துரை

சுமார் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவில்களில் பிராமணர் அல்லாதோரையும் அர்ச்சகர்களாக நியமிக்க பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்தன.  இது குறித்துப் பல நீதிமன்ற வழக்குகளும் தொடுக்கப்பட்டன.  இதற்கான பயிற்சி பெற்றவர்கள் மொத்தம் 206 பேர் ஆவார்கள்,  கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு முதல் பிராமணர் அல்லாத அர்ச்சகரை நியமனம் செய்தது.

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தற்போது அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பயிற்சி பெற்றோரில் இதுவரை இருவருக்கு பணி நியமனம் கிடைத்துள்ளது. ஒருவர் இறந்து விட்டார்.  மீதமுள்ளோர் இன்னும் பணிக்காகக் காத்துக்கொண்டு உள்ளனர்  சுமார் 36 வயதான  தியாகராஜன் மதுரைக்கு அருகில் உள்ள நாகமலையில் உள்ள விநாயகர் கோவிலில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தியாகராஜன், “சுமார் 13 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு எனக்கு தற்போது பணி நியமனம் கிடைத்துள்ளது.  இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  பணி நியமனம் கிடைக்காதோர் திருமணம், இல்லம் குடி புகும் விழா மற்றும் சிறிய கோவில் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களில் பலரை இந்த விழாக்களுக்கும் ஒரு சில வகுப்பினர் அழைப்பதில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

இவ்வாறு பணி நியமனத்துக்கு காத்திருக்கும் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் தங்களுக்குப் பணி நியமனம் செய்வதில் தாமதம் உண்டாவதால் வயது காரணமாகத் தகுதி இழப்பு ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.  தற்போது இவர்களுக்கு ரூ.4000 வருமானம் கூட கிடைக்காத நிலையில் சிறு கோவில்களில் பணி கிடைத்தாலும் ரூ.10000 ஆவது வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

இதுவரை சிறு கோவில்களில் மட்டும் நியமனம் நடந்துள்ளதாகவும் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம், மதுரை, மயிலை, பழனி, திருச்செந்தூர் போன்ற அறநிலையத்துறையின் கீழ் வரும் எந்தக் கோவிலிலும் இவர்களுக்குப் பணி அளிக்கப்படவில்லை என தமிழக அரசு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.  மூத்த அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் சாதி அடிப்படையில் நியமனம் செய்வதில்லை என்பதே கொள்கையாகும் எனக் கூறி உள்ளார்