கமதாபாத்

பா ஜ க ஆளும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது

குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்ப நிறுவனம் சாரங்க் கெமிகல்ஸ்.   இது வர்த்தக ரீதியாக அவ்வளவாக அறியப் படாத ஒரு நிறுவனம் ஆகும்.   இதன் உரிமையாளகளாக ரூபானியின் குடும்பம் (Rupani’s Hindu undivided family) பதிவு செய்யப்பட்டுள்ளது.   குடும்ப உறுப்பினர்களாக மொத்தம் 22 பேர் கூறப்பட்டுள்ளனர்.   இந்த நிறுவனம் பங்கு வர்த்தகம் செய்ததில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (செபி) எனப்படும் பங்கு வர்த்தக கட்டுப்பாட்டுத் துறை ஒரு வழக்கை தொடர்ந்தது.

கடந்த 2011ஆம் வருடம் ஜனவரியில் இருந்து 2011ஆம் வருடம் ஜூன் வரையிலான கால கட்டங்களில் பங்குகள் வர்த்தகத்தில் இந்த நிறுவனம் நடக்காத பரிவர்த்தனைகளை நடந்ததாக கூறியதாக புகார்கள் எழுந்தன.  அது மட்டுமின்றி போலியாக விலைகளை உயர்த்தி பங்கு வர்த்தகம் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.   இதை ஆராய்ந்த பின்னர் செபி இந்த வழக்கை தொடர்ந்தது.   இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை 13ஆம் தேதி சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.    அதைத் தொடர்ந்து 2016ஆம் வருடம் மே மாதம் ரூபானி உட்பட 22 பேருக்கும் நோட்டிஸ் வழங்கப்பட்டது.   அதற்கு மூன்று மாதங்கள் கழித்து 2016ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவி ஏற்றுக் கொண்டார்.

ரூபானியும், மற்றவர்களும் எந்த ஒரு விசாரணைக்கும் வரவில்லை.  இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தொலைபேசி, ஈ மெயில், மெசேஜுகள் மூலமாக பலமுறை நினைவூட்டப்பட்டது.   ஆனால் அவர்கள் அதற்குப் பிறகும் விசாரணைக்கு வரவில்லை.   நோட்டீசுக்கு பதில் சொல்லாத ரூபானியின் குடுமபத்தினர் அந்த நோட்டீசுடன் இணைக்கப்பட்டிருந்த சிடி பழுதானதால் அதை பார்க்க முடியவில்லை என ரூபானி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   அதனால் மற்றொரு சிடி அனுப்பி வைக்கப்பட்டது.  அதுவும் பார்க்க முடியவில்லை எனில் செபி அலுவலகத்துக்குநேரில் வந்து மற்றொரு காப்பி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.   அதற்கு ரூபானி தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து செபி உரிமையாளர்கள் அனைவருக்கும் பங்கு வர்த்தகத்தில்  முறைகேடு நடத்திய குற்றத்துக்கு ரூ. 6.9 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.    இதில் ரூபானிக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.   அடுத்த மாதம் குஜராத் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த தீர்ப்பு அரசியல் ஆர்வலர்கள் இடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.