ராஜஸ்தான் : வந்தே மாதரம் நிகழ்வில் அசோக சக்கரமின்றி காணப்பட்ட மூவர்ணக் கொடி

Must read

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் அரசு ஒரு இந்து அமைப்புடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மூவர்ணக் கொடி அசோக சக்கரமின்று உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

ராஜஸ்தான் அரசு நேற்று வந்தே மாதரம் என ஒரு நிகழ்வை நடத்தியது.   இதை அரசுடன் இணைந்து ராஜஸ்தான் இளைஞர் சங்கம் மற்றும் இந்து ஆன்மீக சேவை சங்கம் நடத்தியது.  இந்த நிகழ்வானது இளைஞர்களுக்கு நமது கலாசாரம், தேசியம் ஆகியவைகளைப் புரியவைத்து அவர்களை சமுதாய சீர்கேடுகளுக்கு எதிராக போரிடத் தூண்டுவதற்காக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய சேவை மையம், என்சிசி, ராஜாஸ்தான் சாரணர் படையினர், பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 50000 பேருக்கும் மேல் கலந்துக் கொண்டனர்.   இது தேசியத்தை இளைஞர்களுக்கு புரிய வைக்கும் நிகழ்வு என சொல்லப்பட்டது.   ஆனால் தவறாக பிரிண்ட் செய்யப்பட்ட தேசியக் கொடியை விழாவில் உபயோகப்படுத்தப்பட்டது.  மூவர்ணக் கொடியின் இடையில் உள்ள அசோக சக்கரம் அந்தக் கொடிகளில் காணப்படவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

நிகழ்வு நடந்த இடத்தில் சுமார் 12 இடத்தில் தேசியக் கொடிகள் காணபட்டன.  அத்துடன் மைதானத்தில் ஒரு தேசியக் கொடி ஏற்றப்பட்டது.   கலந்துக் கொண்ட அனைவருக்கும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.    ஆனால் எந்த ஒரு கொடியிலும் அசோக சக்கரம் காணப்படவில்லை.   இது குறித்து விழா அமைப்பாளர்களிடம் சிலர் கேட்டபோது பிரிண்ட் செய்தவர்கள் அசோக சக்கரம் பிரிண்ட் செய்ய மறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.   விழாவில் கலந்துக் கொண்ட பல மாணவ மாணவிகளும் அசோக சக்கரம் காணப்படாததை கவனிக்கவில்லை.

விழா முடிந்ததும் கலந்துக் கொண்ட பல மாணவ மாணவிகள் அந்தக் கொடியை கிழித்துக் குப்பையை போல வீசி விட்டு சென்றுள்ளனர்.   நிகழ்வில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே உட்கார வைக்கப்பட்டனர்.  ஒன்றாக அமரவைத்தால் அவர்களை கண்காணிக்க முடியாது என விழா அமைப்பாளர்களால் கூறப்பட்டது.  அது மட்டுமின்றி மாணவர்கள் காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை உட்கார்ந்த  இடத்தை விட்டு கழிப்பறைக்கு செல்லவும் அனுமதிக்கப் படவில்லை என சிலர் கூறி உள்ளனர்.

இந்தித் திரைப்பட இசை அமைப்பாளரான ஆனந்த்ஜி (கல்யாண்ஜி – ஆனந்த்ஜியில் ஒருவர்)  இசை அமைப்பில் வந்தே மாதரம் மாணவர்களால் இசைக்கப்பட்டது.   பிறகு இந்தித் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டு அவற்றுக்கு மாணவ மாணவிகள் குத்தாட்டம் ஆடியதும் நடந்துள்ளது.   பல மாணவ மாணவிகளுக்கு வந்தே மாதரம் பாடல் வரிகள் தெரியாததால் வெறுமனே நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.   மொத்தத்தில் இந்த விழா பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது

செய்தி மற்றும் படங்கள் உதவி : தி ஒயர்

More articles

Latest article