பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் அழிந்து வருவதை அடுத்து ஒரே நாளில் நான்கு முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பணியில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த வாரம் அறிவித்தனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு சொற்ப இடங்களை மட்டுமே ஒதுக்க பாஜக முடிவெடுத்துள்ளது.
பாஜக-வின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையால் தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகள் குமுறலில் உள்ளன, பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார் தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த வாரம் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
இங்கிலாந்தில் இருந்தபடி தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் பாஜக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிதிஷ் குமார் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு லோக் ஜனசக்தி கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) என்றும் பசுபதி பரஸ் தலைமையில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி என்றும் இரண்டு கட்சிகளாக இயங்கி வருகின்றன.
2019 தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் தற்போது இரண்டு கட்சிகளாக பிரிந்துள்ள இவர்கள் தலா ஐந்து இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) மற்றும் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி ஆகிய இரண்டு கட்சிகளையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ள பாஜக இவ்விரண்டு கட்சிகளுக்கும் தலா நான்கு இடங்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில் ஜித்தன் ராம் மஞ்சி, முகேஷ் சாஹ்னி மற்றும் உபேந்திர குஷ்வாகா ஆகியோரின் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது.
பீகாரில் பாஜக கூட்டணியில் அமைந்துள்ள லோக் ஜனசக்தி உள்ளிட்ட இந்த கட்சிகள் அனைத்தும் ஐக்கிய ஜனதாதள கட்சியில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற கட்சி என்பதால் இந்த கட்சிகளுடன் பாஜக தனக்கு உள்ள இடங்களில் இருந்து தொகுதிகளை பிரித்து தரட்டும் என்று நிதிஷ் குமார் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இருந்தபோதும் 17 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட தீர்மானித்துள்ள பாஜக இதர கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கும் என்பது அடுத்தவாரம் இங்கிலாந்தில் இருந்து நிதிஷ்குமார் வந்த பிறகு தான் தெரியும் என்று கூறப்படுகிறது.
இதனால் பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு இழுபறியில் உள்ளதால் வேட்பாளர்கள் தேர்விலும் இழுபறி நீடித்து வருகிறது.