சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, குறைந்த அளவிலான தொகுதிகளையே ஒதுக்க திமுக முன்வருவதால், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், திமுக 20க்கும் குறைவான தொகுதிகளையே ஒதுக்க முன்வந்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று மாலை மீண்டும் திமுக தலைமையுடன் காங்கிரஸ் குழுவினர் தொகுதி ஒதுக்கீடு குறித்துபேச உள்ளனர். இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடம், கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்தும், இன்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் உடன் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி கலந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக்கொள்ளும் என்றும், இரு கட்சிகளுக்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.