சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்குப் பங்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைந்த இடங்களே வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது. இதையடுத்து, 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் வழங்கப்படும் தொகுதிகளை குறைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்க வெறும் 27 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகவும் அறிவாலய வட்டாரத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தமிழகத்தில் திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தல் வெற்றிபெற்றது போல, சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் பிற கட்சிகளுடனான எங்கள் கூட்டணி ஒருங்கிணைந்து 2019 ல் மக்களவைத் தேர்தலை வென்றது. அதுபோல, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தும்.
‘திமுக தலைமையிலான முன்னணியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கூறியவர், கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து நிலையில், காங்கிரஸ் கட்சி யதார்த்தமாக செயல்படும், இதுதொடர்பான விவாதங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் இடங்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளது, தங்களது கட்சியில் நல்ல வேட்பாளர்களும் பலர் உள்ளனர் என்றவர், பீகாரில் நடைபெற்று முடிந்த தேர்தல் வேறு வகையானது, ஆனால் தமிழகத்தின் தேர்தல் வேறு வரையானது. இங்கே, திமுகவுடன் எங்களுக்கு ஒரு கூட்டணி உள்ளது, கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி ஒன்றாகப் போராடினோம். அதனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வென்றது. இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெறுகிறது. அது தொடரும்.
மேலும், திமுக மற்றும் பிற கட்சிகளை காங்கிரஸ் பலப்படுத்த முடியும் என்று கூறிய குண்டுராவ், “சுமார் 100 இடங்களில், திமுகவிற்கு நாங்கள் உதவ முடியும், அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது,” என்று கூறியவர், தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் தொகுதி பகிர்வு ஏற்பாடு ஒரு யதார்த்தமான அணுகுமுறை, காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்குப் பங்கின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், “நாங்கள் எங்கள் கூட்டாளர்களை சமாதானப்படுத்த முயற்சிப்போம், நியாயமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொள்வோம். தேவையற்ற பேரம் பேசக்கூடாது, ”என்பதையும் நினைவு கூர்ந்தார்.
மக்களவை தேர்தலின் போது பிரதமர் பணிக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரித்த நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும், தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, ராகுல்காந்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் செய்வதற்கான ஒரு விரிவான திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், தற்போது திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கூட்டணி கட்சி 39 இடங்களை கைப்பற்றியதுபோல, சட்டமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.