கோலாலம்பூர்:

2014ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777 விமானம் ஒன்று காணாமல் போனது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணத்தைத் தொடங்குவதற்கு தயாராக இருந்தது விபி 370 விமானம்.

227 பயணிகள் இருந்தார்கள். அதில் 153 பேர் சீனர்கள். தலைமை பைலட்டான ஜஹாரி அஹ்மது ஷா-வும் துணை பைலட்டான ஃபரீக் அப்துல் ஹமீதும் விமானத்தில் ஏறிய பின்பு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்புகொள்கிறார்கள்.

வானில் விமானத்தை வழிநடத்துவதற்கான உரையாடல் தொடங்கியது. விமானம் 35,000 அடியில் பறந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அரையுடன் இரவு வணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதுதான் விபி370 அனுப்பிய கடைசித் தகவல்.

அதன் பிறகு தனது வழக்கமான பாதையிலிருந்து விலகிப் பறக்கத் தொடங்கி மலேசியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான தென் சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென இடதுபுறமாகத் திரும்பி இந்தியப்பெருங்கடலை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பிறகு விமானத்தை தொடர்புகொள்ள முடியவில்லை, ரேடாரிலிருந்தும் மறைந்தது. .

சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகள் விமானத்தைத் தேடும் பணியில் இறங்கின. செயற்கை க்கோள்கள், ரோந்துக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் என எதை வைத்துத் தேடியும் எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2015 ஜூலையில் இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீயூனியன் என்ற தீவின் கடற்கரையில் அந்த விமானத்தில் இறக்கை பகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வேறு எந்த முன்னேற்றமும் இல்லாததால் தேடுதல் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

விமானம் காணாமல் போய் நான்கு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் தேடுதலுக்கான இறுதி முயற்சியை மீண்டும் தொடங்கியிருக்கிறது மலேசியா. இதற்காக ஒசேன் இன்ஃபினிட்டி என்ற அமெரிக்க நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

90 நாள்களுக்குள் இந்தத் தேடுதலை நடத்தி முடிக்கவும் அதில் விமானத்தின் கறுப்புப் பெட்டியோ அல்லது இதர பாகங்களோ கண்டறியப்பட்டால் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்ப டும் என்றும் எதுவும் கண்டறியப்படவில்லை என்றால் பணம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை எனவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.