விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, அங்கு தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட்டதுடன், அதற்காக பூசாரிகளை நியமிக்கவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அதிகாரிகள் அகற்றினர். சுமார் 9 மாதங்களுக்குப்பிறகு கோயில் இன்று திறக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஒருகால பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 6மணி முதல் 7மணி வரை பூஜை நடைபெறும் என்றும், அதற்காகஅர்ச்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆனால், பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.