சென்னை: கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 2 மாதங்களுக்கு உள்ளே கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் அரிவாள் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 2 பேருக்கு வெட்டு விழுந்துள்ளது.

மாணவர்களின் அரிவாள் கலாச்சாரத்தை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு, அடக்கி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிழகஅரசுக்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் அரிவாள் கத்தியுடன் கடுமையாக மோதிக்கொண்டனர். மேலும் கற்கலாலும் தாக்கிக்கொண்ட நிலையில்,   பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகிய இருவரை மாநில கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டி விட்டுதப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில், ரயில் நிலைய அதிகாரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த  மீஞ்சூர் போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

[youtube-feed feed=1]