அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், டில்லி, ஜம்மு மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீர்ப்பினால் நாட்டின் எந்த மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க, அந்தந்த மாநில காவலர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள காரணத்தால் டில்லி, ஜம்மு மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அம்மாநிலங்களில் 144 தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.