ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் 40நாட்கள் நடைபெற்ற வாதங்கள் என்னென்ன?

Must read

டெல்லி:

500 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற  ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த தீர்ப்பை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ராமஜென்ம பூமி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதி மன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அளவிலான நிலத்தை, ராம்லல்லா விராஜ்மான், நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம், சமமாக பங்கிட்டுகொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்து, இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை ஏற்ற உச்சநீதி மன்றம் அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்து, தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. தொடர்ந்து  40 நாட்கள் விசாரணைக்கு பிறகு நாளை தீர்ப்பு வழங்கபட உள்ளது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது பெரிய வழக்கு என அயோத்தி நிலம் வழக்கு கூறப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணையின்போது நடைபெற்றது என்ன என்பது குறித்து சற்றே பின்னோக்கி பார்க்கலாம்…

இந்த வழக்கு விசாரணையின்போது,  நீதிபதிகள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். அந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் 30க்கும் மேற்பட்ட, அதனோடு தொடர்புடைய கேள்விகளை எழுப்பியும், அதற்கு விளக்கம் கேட்டறிந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அனைத்து தரப்பும் தினமும் வாதங்களை வைத்தனர். விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு புதிய ஆதாரங்கள், வாதங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

ழக்கின் முக்கிய அமைப்பான நிர்மோஹி அக்காரா தரப்பு உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாதமாக,
ராமர் கோயில் இருந்த இடத்தில்தான், 1528ஆம் ஆண்டு பாபரின் படைத்தலைவர் மிர் பகி பாபர் மசூதியை கட்டினார். பாபர் மசூதிக்கு கீழ் கோயில் இருந்ததாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது என்று வரலாற்று ஆவனங்களை தாக்கல் செய்தது. இவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஜெயின் ஆஜரகி வாதாடினர்.

அப்போது, பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில்தான், சீதா ரசோய்(சீதாவின் சமையலறை), பந்தர் கிரிஹ் உள்ளிட்ட உள்முற்றங்கள் இருந்தது என்றும், அதைத்தான்  நிர்மோஹி அக்காரா உரிமை கொண்டாடுவதாக ஜெயின் தெரிவித்தார்.

மேலும், 1932ஆம் ஆண்டில் இருந்து கோயில் நுழைவாயிலை தாண்டி முஸ்லிம்கள் யாரும் அனுமதிக்கப்பட்ட தில்லை. இந்துக்கள் மட்டுமே அங்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்று 1934ஆம் ஆண்டிலேயே வழக்கு தொடர்ந்தோம், ஆனால் சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு உரிமை கோரி சன்னி வக்பு வாரியம் 1961ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்தது என்று கூறியவர்,  1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்துக்கள் அந்த இடத்தில் சிலைகளை நிறுவியதாக கூறுவது பொய்யானது. குழப்பத்தை ஏற்படுத்தவே என்றும் வாதிட்டார்.

துபோல, விசாரணையின்போது,  ராம் லல்லா கட்சி சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் வாதாடினார். அவர், வால்மிகி ராமாயணத்தை எடுத்துக்காட்டி குறிப்பிட்டு, ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதை எடுத்துரைத்தார்.

இந்த விவாதங்களின்போதுதான், நீதிபதிகள், இயேசு கிறிஸ்து பெதல்ஹெம்மில் பிறந்தாரா என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பராசரன், ‘ஜன்மஸ்தன்’ என்று அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் ராமர் சரியாக பிறந்தி ருக்க வேண்டும் என்பது இல்லை என்றும், அதனை சுற்றியுள்ள இடத்திலும் அவர் பிறந்திருக்க வாய்ப்பு என்று என்றவர்,  இடம் முழுவதுமே  ‘ஜன்மஸ்தான்’  என்றார்.

ராம் லல்லா அமைப்பின் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன், டிசம்பர் 16, 1949ல் முஸ்லிம்கள் அங்கு கடைசியாக தொழுகை செய்ததாக தெரிவித்தார். டிசம்பர் 22, 1949ல் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலைகள் வைக்கப்பட்டதால் முஸ்லிம்களால் அங்கு தொழுகை செய்ய முடியவில்லையா என்று  கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த வைத்தியநாதன், முஸ்லிம்களால் அந்த இடத்தை அதற்கு பின் அணுக முடியவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் 1608-11ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஃபின்ச் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, அயோத்தி குறித்து குறிப்பிட்டதாகவும் தெரிவித்தவர்,  ராமர் அங்கு பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கை 15-16ஆம் நூற்றாண்டிலேயே இருந்தாகவும் வலியுறுத்தினார்.

அடுத்தடுத்த விசாரணைகளின்போது, வாதாடிய வைத்தியநாதன், கோசலை ராஜ்ஜியத்தின் தலைநகராக அயோத்தி இருந்தது என்றும், அந்த நாட்டின் அரசர் தசரதன். அவர்தான்  ராமரின் தந்தை, ராமாயணத்தின் கதாநாயகன் என்று குறிப்பிட்டார். ராமர் பிறந்த இடத்தில்தான், மசூதி கட்டப்பட்டது என்று வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தார்.

இந்து அமைப்புகளின் வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்திய தொல்பொருள் ஆய்வின் அறிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, அந்த இடம் இஸ்லாமி யர்களுக்கு சொந்தமானது என்று வலியுறுத்தினார்.  1934ஆம் ஆண்டு முதல், மசூதியில் தொழுகை செய்ய முஸ்லிம்களுக்கு இந்துக்கள் அனுமதி அளிக்கவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, இது தொடர்பாக  முஸ்லிம்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தவான், 1950ம் ஆண்டு  மசூதி மூடப்பட்டதாகவும், பின்னர் முஸ்லிம்கள் மசூதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதான் தொழுகை நடத்தினார்கள், பாபர்  மசூதியின் சாவி முஸ்லிம்களிடம் இருந்ததாகவும்,  வெள்ளிக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் அங்கு தொழுகை நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றார்.  இந்த மசூதி  பாபரால் கட்டப்பட்டது என்றும், அதற்கான   சில ஆவணங்களையும் ஆதாரங்களையும் அவர் சமர்பித்தார்.

இந்த வழக்கின் இறுதிநாள் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 16ந்தேதி பரபரப்பாக நடைபெற்றது. அன்றைய தினம்,  இந்து அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முடிந்து, அதற்கான ஆவனங்கள் அடங்கிய புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான், இந்து அமைப்புகள் தாக்கல் செய்த ஆவணங்கள், வரைபடங்களை கிழித்து எறிந்ததுடன்,  நீதிமன்றத்தை இந்து அமைப்புகள் கேலிக்கூத்து ஆக்குவதாகவும் கூறினார்.

இந்து அமைப்புகள் தாக்கல் செய்த அந்த ஆவணத்தில், ராமர் பிறந்த இடம் குறித்த தகவல்கள் இருந்தன.

வழக்கறிஞர் ராஜீவ் தவானின் செயலால் உச்சநீதி மன்றத்தில்   பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடும் கோபமடைந்த தலைமைநீதிபதி, வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், வழக்கறிஞர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், தாங்கள் விசாரணையில் இருந்து எழுந்து சென்று விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே தவிர, பலன் எதுவும் ஏற்படாது. நீதிமன்ற அறையின் மாண்பை காக்க வேண்டும் எனக்கூறினார்.

அதைத்தொடர்ந்து இந்து அமைப்பு சார்பில் வாதாடிய எஸ்.கே.ஜெயின்,  வக்பு வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் நிதி பெறுவது தொடர்பானதுதான், பாபர் மசூதி தொடர்புடையது அல்ல என்றும், நிதி உதவிக்கும், பாபர் மசூதியை உரிமை கொண்டாடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லைஎன்றார்.

மேலும்,  அயோத்தியில் ராமர் கோவில்தான் முன்னர் இருந்தது அதன் பின்புதான் கோவிலை இடித்து மசூதி கட்டினார்கள்  என்று கூறியவர், பாபர் அயோத்திக்கு வந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து நிர்மோகி அஹாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ராமஜென்ம பூமி என்பது ஒன்றுதான். வேறு இடத்தை கூற முடியாது. முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். ராமஜென்ம பூமியில் மட்டும் தான் ஹிந்துக்கள் வழிபட முடியும்.

சர்ச்சைக்குரிய நிலத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை. 1934க்கு பிறகு முஸ்லீம்கள் அங்கு வழிபடுவதை நிறுத்தினர். ஹிந்துக்கள் தான் வழிபாடு செய்கின்றனர் எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.  அத்துடன் இந்த வழக்கில் மாலை 5 மணிக்கு முடிவடையும் என்று கூறிய தலைமை நீதிபதி, முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் என்றார். அத்துடன் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், அயோத்தி பிரச்சினையை, இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே சமரசமாக  பேசி தீர்க்கும் வகையில்,  முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை உச்சநீதி மன்றம், கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அமைத்தது. இந்த குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர்,  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர்  இடம்பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், நாளை உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கும் என தெரிகிறது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உபி, மாநில தலைமை செயலாளர் மற்றும் மாநில டிஜிபியுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்தார்.

உச்சநீதி மன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதி முடிய உள்ள நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

More articles

Latest article