சென்னை:
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில்  பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில்  பள்ளிகள் திறக்கப் படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் போதிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் அரசு பள்ளி மாணாக்கர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பல மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை ஆகஸ்டு, செப்டம்பரில் திறக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் ரூ.1.10 கோடி மதிப்பில் சார்பதிவாளர் கட்டடம் அமைக்கும் பணிகளைப் பூமி பூஜை செய்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்தவர், பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் பாராட்டு தெரிவித்துள்ளது என்று கூறினார்.
அத்திக்கடவு திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டபிறகு முடிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகே  1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் 10ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த மாத இறுதிக்குள் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.