சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் கோலாகலமாக இன்று பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள் தங்களது நண்பர்களை ஒரு மாத விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்ததில் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அது போல் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையும் இறுதித் தேர்வுகள் நடந்தன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. அப்போது ஜுன் 2ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அக்னி வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி வந்த நிலையில், முன்கூட்டியே தொடங்கிய பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் குளிர்ச்சியான சூழ்நிலையே தொடர்ந்தது. இதனால் திட்டமிட்டபடி, ஜுன் 2ந்தி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கடந்த ஒரு வாருமாக பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. மேலும், பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதல் நாளிலேயே ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர்.