சென்னை: தமிழகத்தில் 16ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகள்  திறப்பது குறித்து வரும்  12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்  என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. தற்போது,  கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில்,  பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், திறக்க வேண்டாம் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,   9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் கடந்த வாரம் அறிவித்தார்.  தொடர்ந்து,  நேற்று பள்ளிகள் திறப்புக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் தங்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பிய  நிலையில், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.