மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா சத்திரபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன்குமார் மற்றும் இந்திரா தம்பதியர். இவர்களுக்கு  இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள சென்னம நாயக்கன்பட்டியில் தென்னை மட்டை நார் கம்பெனி நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சத்திரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திரா  வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அடிக்கடி தனது சொந்த ஊரான   சென்னம நாயக்கன் பட்டியில் இருந்தபடியே சத்திரபட்டிக்கு அடிக்கடி சென்று வந்தார்.

இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்திராவின் கணவர் அவரிடம் பேசுவதை தவிர்த்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு இந்திரா ஆனதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவி இந்திரா  தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தாடிகொம்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.