சென்னை:

ண்ணீர் பற்றாக்குறையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல தனியார்  பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், அது வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் நிலவும்  தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வரும் 17ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை மேலோங்கி உள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சினை காரணமாக பிரபல ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற் றும்படி  பரிந்துரைத்துள்ள நிலையில், பள்ளிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பல தனியார் பள்ளிகள் இன்று மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான தகவல் தவறானது. சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வந்துள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்ப்பது குறித்து வரும் 17 ம் தேதி முதல் ஆலோசனை நடைபெற உள்ளது. பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால், 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்தி, தண்ணீர் பிரச்னையை பள்ளிகள் தீர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.