சென்னை: சென்னையில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி  இன்று தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9 மாதங்களாக கல்வி நிறுவனங்களே தொடங்கப்படாத நிலையில், மாநிலஅரசு இலவச சைக்கிள் வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம், ஆட்சியாளர்களால், தேர்தலை கருத்தில்கொண்டு வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தமிழகஅரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. அதன்படி, 2020-21 நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.  சென்னை தலைமை செயலகத்தில் இலவச சைக்கிள் வழங்கப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. ஜனவரி 2021-ல் கூட திறக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021ம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்திலேயே தமிழகஅரசு,  பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்,  இலவசமாக சைக்கிள் வழங்கியிருப்பது அரசியல் விமர்சகர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.