திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால்  மாணவன் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில்  அமர்ந்து  உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென பள்ளியின்  பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் உயிரிழந்தார். இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், பள்ளி ஆசிரியரையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சித்தனர்.  உயிரிழப்பு.

பள்ளிக் கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலை பல ஆண்டுகளாக தொடரும்  நிலையில், இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், ஆசிரியர்களும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததே இந்த அச்மபாவிதத்துக்கு காரணம் என  பெற்றோர் குற்றம்சாட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பளிளியில் 7ம் வகுப்பில்  மோகித் என்ற மாணவன் பயின்று வந்தார். இவர்  இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நிலையில் மதிய உணவு  இடைவேளையின்போது, பள்ளியின் படிக்கட்டு பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.   பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து  அவர் மீது விழுந்துள்ளது. இதில் மாணவன் மோகித் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட சக மாணவர்கள்,   மற்றும் ஆசிரியர்கள் மாணவன் மோகித்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், காயம் அடைந்த மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பள்ளி ஆசிரியர்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.  மேலும் பல பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் கூடினர். அதே சமயம், மாணவரின் உறவினர்கள் சிலர் பள்ளி அருகே கூடி, ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலை மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் என அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாட்டோம் என கூறி காவல் துறையினருடன் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெற்றோர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர்  உறுதி அளித்த நிலையில், பெற்றோர்கள் சமாதானம் அடைந்தனர்.

 மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[youtube-feed feed=1]