திருச்சி:
பள்ளி சென்ற மாணவிகள் இருவர் மர்மமான முறையில் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சரளப்பட்டியைச் சேர்ந்தவர் ரதிதேவி, செல்வி. இவர்கள் இருவரும் தோழிகள். இவர்கள் அருகே உள்ள ஆர்.எஸ். வையம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இரு மாணவிகளின் பெற்றோரும், மாணவிகளை தோழிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடினர். எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாயமான மாணவிகள் இருவரும் பள்ளி சீருடை அணிந்த நிலையில் வையம்பட்டி அருகே உள்ள இடைக்காட்டனூர் என்ற ஊரின் பின் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.
இதையறிந்த அவர்களது குடும்பத்தி னர் மற்றும் உறவினர்கள் கிராம மக்கள் அலறியறித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வர்களின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீ சாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் ஆனி விஜயா தலைமையிலான ரெயில்வே போலீசாரும் வையம்பட்டி சட்டம் ஒழுங்கு போலிசாரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாணவிகளின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி சென்ற மாணவிகள் இருவரும் எவ்வாறு இறந்தார்கள்… இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது யாராவது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனரா வைய்யம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இறந்த மாணவிகளில் ஒருவரான ரதிதேவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே பகுதியை சேர்ந்த இரு மாணவிகள் திடீரென இறந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தயும் ஏற்படுத்தி உள்ளது.