சென்னை:  அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை, 1ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில், காலாண்டு விடுமுறை  அக்.12-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உளள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க ஏதுவாக வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம்  நடத்தப்படுவதாகவும், இந்த கூட்டத்தில் முதன்மை கருத்தாளர்கள் எவ்வித முன்னறிவிப்பு இன்றி பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்.12-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது. ஆனால், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்,  தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்.10 முதல் 12 வரை எண்ணும், எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.