சென்னை:  அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

எம்ஜிஆர் காலத்து அதிமுக தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலிதாவுடன் மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி விஜயகாந்தின் தேமுதிகவில் இணைந்தார். அங்கு அவருக்கு  அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அங்கு தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற கூறி, மீண்டும்,  ஜெயலலிதா முன்னிலையில்  அதிமுகவில் இணைந்தார். ஆனால், அவருக்கு பதவி ஏதும் கொடுக்காமல் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். அதனால், பண்ருட்டி ராமச்சந்திரன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் . அதிமுக அணிகளாக உடைந்து சிதறிய நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கனத்த மவுனம் காத்து வந்தார்.

இதற்கிடையில் ஜெயலலிதா மறைந்ததும், சசிகலா ஆட்சியை கைப்பற்ற எடுத்த நடவடிக்கை, அவருக்கு எதிராக ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் போன்றவற்றால் அதிமுக உடைந்தது. பின்னர் பாஜகவின் ஆலோசனையின் பேரில் ஒபிஎஸ், இபிஎஸ் இணைந்து கட்சியை வழிநடத்தி வந்தனர். சசிகலா, தினகரன் உள்பட மன்னார்குடி மாஃபியாக்களை கட்சியில் இருந்து வெளியேற்றினர். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவை கைப்பற்ற தற்போது சாதி ரீதியிலான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், சசிகலா உள்பட முக்குலத்தோர் ஒருபுறமும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஒருபுறமும் சேர்ந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இரு அணியினரும் தங்களது பலத்தை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர். அதையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பண்ருட்டியை, சசிகலா கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். இதனால், பண்ருட்டி மீண்டும் அரசியல் களத்திற்குள் வருவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி இராமசந்திரன் (கழக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.