சென்னை:
படிக்கும் பள்ளிகளிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், இந்த கல்வியாண்டு முதல், 5ம்வகுப்பு மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
பொதுத்தேர்வு நடத்த மத்தியஅரசு உத்தரவிட்ட நிலையில், ஆரம்பத்தில், தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று கூறிய கல்வி அமைச்சர், பின்னர் தேர்வு நடத்தப்படும் என்று ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்வு எழுதும் மாணவர்கள், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் தகவல் கேட்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
அத்துடன், 5மற்றும் 8ம் வகுப்பு, பொதுத்தேர்வு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் நடைபெறாது என்றும், வேறு பள்ளியில்தான் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களது பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் என்றும் அதற்கான மொத்த அறிவிப்புகளும் இன்று மாலை வெளியாகும் என்றும் தெரிவித்தார்