சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறி, கல்வி நிலையங்கள் திறப்பு உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை தமிழகஅரசு வெகுவாக தளர்த்தி உத்தரவிட்டுள்ள நிலையில், ‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’ பள்ளிக்கல்வித்துறை இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் தொற்று பரவல் நீடித்து வருகிறது. அந்த பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும், தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக கூறிய தமிழகஅரசு, கொரோனா கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி,  பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை முழுமையாக திறக்க உத்தரவிட்டு அனைத்து மாணாக்கர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறியது.

ஆனால், தொற்று பரவல் முழுமையாக குணமடையாத நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு எழும் என கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும்,  மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது  என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும், மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் சுழற்றி முறையில் வகுப்பு நடத்திக்கொள்ளலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.