புதுடில்லி
நா த க யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இனி யார் குறித்தும் அவதூறாகப் பேசக்கூடாது என நிபந்தனை விதித்தது.
ஆனால் அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதால், தஞ்சை வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இன்று உச்சநீதிமன்றம் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிபதிகள் ஜாமீனில் இருக்கும்போது அவதூறான கருத்துக்களை வெளியிடாமல் இருக்க சட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் “ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன், யூடியூபில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேரை சிறையில் அடைப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்..?” எனத் தமிழக அரசு வழக்கறிஞரிடம் வினா எழுப்பினர்.