டில்லி
அயோத்தி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் ஒரு நீதிபதி வர முடியாத காரணத்தால் இந்த வழக்கு 29 ஆம் தேதி விசாரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கின் மேல் முறையீட்டுக்காக 14 தரப்பில் இருந்து மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அயோத்தி வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் ரஞ்சன் கோகாய், எஸ் ஏ பாப்தே, என் வி ரமணா, டி ஒய் சந்திரசூட், யு யு லலித் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த அமர்வு இந்த மாதம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் வழக்கை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் வழக்கறிஞர் ராஜிவ் தவன் ஒரு சர்ச்சையை எழுப்பினார்.
முன்னர் இந்த வழக்கின் போது தற்போது அமர்வில் உள்ள நீத்பதியான யு யு லலித் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் சார்பாக வாதாடியதாக ராஜிவ் தவன் கூறினார். அதை ஒட்டி நீதிபதி யு யு லலித் அமைப்பில் இருந்து விலகினார். அதனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் புதிய அமர்வு ஒன்றை அமைத்தார்.
இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முந்தைய அமர்வில் இருந்த எஸ் வி ரமணா மற்றும் யு யு லலித் இந்த அமர்வில் இடம்பெறவில்லை.
அயோத்தி வழக்கு புதிய அமர்வின் கீழ் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ் ஏ பாப்தே வரும் 29 ஆம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த வழக்கு விசாரணை வரும் 29 ஆம் தேதி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.