டில்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி தொடர்வதாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணி விவகாரத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது என்று வாதாடியதுடன், நிலைமையை கருத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி தரப்பட்டது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை என்று தெரிவித்தது.
மேலும், பிரச்னைகள் உள்ள இடங்களில் தான் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கடமை. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்று கூறியதுடன், கோவை வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் செய்தது.
இதையடுத்து, இருப்பு வாதங்களை கேட்டதுடன், நாளை மறுநாள் பேரணி நடைபெறுவதை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுத்தி வைப்பதாக உறுதி அளித்தது.
இதை ஏற்று, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 17 க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.