சென்னை
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஜூன் 30 ஆம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரஸ் தொற்று தமிழகத்தின் வேறு சில நகரங்களிலும் அதிக அளவில் உள்ளன .
அதையொட்டி மதுரை நகரில் 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் ”மதுரை நகரில் மாநில அரசு 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அவசர கால ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன” என அறிவிக்கப்பட்டுள்ளது.