டில்லி

பெண்களும் தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு அகாடமி,  இந்திய ராணுவ அகாடமி (ஐ எம் ஏ) மற்றும் அலுவலர் பயிற்சி அகாடமி  (ஓ டி ஏ) மூலமாக இந்திய ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.   இந்த தேர்வுகளில் தேசியப் பாதுகாப்பு அகாடமி (என் டி ஏ) தவிர மற்ற இரு தேர்வுகளை ஆண் பெண் ஆகிய இரு பாலரும் எழுத முடியும்.  ஆனால் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வைப் பெண்கள் எழுத முடியாது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டது.  இது குறித்து மத்திய அரசு நேற்று முன் தினம் அளித்த பிரமாண பத்திரத்தில் இது அரச்டின் கொள்கை முடிவு எனவும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் அமர்வின் கீச் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அளித்த இடைக்கால உத்தரவில், “ஏற்கனவே ஓடிஏ, ஐஎம்ஏ மூலம் மட்டுமே ராணுவத்தில் பெண்கள் சேர தேர்வு செய்யப்பாடுகின்றனர்,  அப்படியிருக்க ஏன் தேசிய பாதுகாப்பு அகாடமி மூலமாகச் சேர முடியாது?  அகாடமியில் இருபாலர்கள் பயில்வதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? அதாவது தேசியப் பாதுகாப்பு அகாடமியில் மட்டும் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா?

அரசு பாலின பாகுபாடு காட்டும் போக்கில் மாற்றம் வேண்டும்.  ஆகவே, தேசியப் பாதுகாப்பு அகாடமி நுழைவுத்தேர்வில் தகுதி  வாய்ந்த பெண்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக, யுபிஎஸ்இ புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவின் மூலம், வரும் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள என்டிஏ நுழைவுத்தேர்வில் பெண்களும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.