டில்லி

நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரையில் இடம்பெற்றுள்ள நாகரத்னா வரும் 2027ல் முதல் பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கடந்த 2 ஆண்டுகளாகத் தாமதம் நிலவி வருகிறது.   இந்த மாதம் 12 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ஆர் எஃப் நாரிமன் ஓய்வு பெற்றார்.  இதையொட்டி 34 நீதிபதிகளுக்குப் பதில் 25 நீதிபதிகள் மட்டுமே பணி புரிந்து வந்தனர்.   எனவே உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரை செய்தது.

இந்த ஒன்பது பேரில் 8 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ஆவார்.   இந்த 8 பேரில் 3 பேர் பெண் நீதிபதிகள் ஆவார்கள்.   இவர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி  நாகரத்னா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி, மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாலா திரிவேதி ஆகியோர் ஆவார்கள்.

இந்த 3 பெண் நீதிபதிகளில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகரத்னா வரும் 2027 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியாக வாய்ப்பு உள்ளது.  அவ்வாறு நடந்தால் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்னும் பெருமையை நாகரத்னா அடைவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.